தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் ராஜினாமா
தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது அரசு ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்களாக வெங்கட்ரமணன், ராம லிங்கம் ஆகியோரும், அலுவலக தனிப்பிரிவு சிறப்பு செயலாளராக சாந்த ஷீலா நாயரும் நியமிக்கப்பட்டனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அப்போதும் அவர்கள் செயலாளர்களாக பணியில் நீடித்தனர்.
சமீபத்தில் முதல்- அமைச்சரின் ஆலோசகர் மற்றும் செயலாளர்களுக்கு பதவி விலக உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷீலா பாலகிருஷ்ணன் அரசு ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் விடுமுறையில் சென்றனர்.
அதன் பிறகு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஓ. பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் அலுவலக தனிப்பிரிவு சிறப்பு செயலாளர் சாந்த ஷீலா நாயர் இன்று திடீரென்று ராஜினாமா செய்தார்.
கடந்த சில நாட்களாகவே அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்தார். இன்று பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1973-ம் ஆண்டு ‘பேட்ச்‘ மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்த ஷீலா நாயர் தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடைசியாக திட்டக்குழு துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு இவரை ஜெயலலிதா தனது அலுவலக தனிப்பிரிவு சிறப்பு செயலாளராக நியமனம் செய்தார். தேர்தல் வாக்குறுதி தொடர்பான திட்டங்களை நிறைவேற்றும் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாந்த ஷீலா நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். திருவனந்தபுரம் ஜவகர் நகர் இவரது சொந்த ஊர். திருவாங்கூர் திவான் ராஜா கேசவதாஸ் குடும்பத்தில் 6-வது தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.