சசிகலா விரைவில் பதவி ஏற்பார் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன்
அரசியல் ஆதாயத்துக்காக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும், சசிகலா விரைவில் பதவி ஏற்பார் என்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, சசிகலா மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். அதோடு அவர் பதவி ஏற்கவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
எம்.ஜி.ஆர். மீதுள்ள பற்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வாக்களித்தார்கள்.
அதை ஈடேற்றும் வகையில் ஜெயலலிதாவின் அரசு செயல்பட்டது. அதே வழியில் இனி சசிகலாவின் அரசு செயல்படும்.
அரசியல் ஆதாயத்துக்காக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். கவர்னர் நடுநிலையோடு செயல்படக்கூடியவர். அவர் நேரம் ஒதுக்கி சென்னை வந்ததும் விரைவில் முதல்- அமைச்சராக சசிகலா பதவி ஏற்பார்.
நமது நாட்டு சட்டப்படி எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்-அமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த அடிப்படையில் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்டுப்பாடு மிக்க கட்சியின் பொதுக்குழுவிலும் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் எந்த பிளவும் இல்லை. கட்சியினர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்தான் சசிகலா.
ஜெயலலிதா அ.தி.மு.க.வின் ஒரு தூண். அதோடு ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இருந்து அனுபவத்தை நேரடியாக கற்ற சசிகலாவும் ஒரு தூண்தான்.
ஜெயலலிதாவின் செல்வாக்கையும் சசிகலாவின் செல்வாக்கையும் வேறு வேறாக பிரித்து பார்க்க கூடாது. முதல்-அமைச்சராக பதவி ஏற்க சசிகலாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லை என்பது தவறு. மத்திய அரசு தமிழகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இரு அரசுகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.