சசிகலாவும், டிடிவி தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி.
அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.
அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன. இதைனையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் கெடு விதித்தது.
விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்தரவிட்டது.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் மிக முக்கிய நிகழ்வாக இரட்டை இலைச் சின்னம் மீட்பு அமையும் என்று கருதப்படுகிறது. சின்னத்தை மீட்டு கட்சியை முழுவதுமாகக் கைப்பற்றும் எண்ணத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அதை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
இதற்காக எடப்பாடி, ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ் வைத்தியநாதன் ஆஜராகியுள்ளனர். டி.டி.வி.தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ஆஜராகி வாதாடி வருகிறார்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். தமது குடும்பத்தினர் மட்டும் அதிமுகவில் அதிகாரம் செலுத்த சசிகலா முயற்சி செய்தார், இதனால் தான் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தார் எனவும் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் சார்பாக வாதிட்ட வழக்கறிஞரோ, டிடிவி தினகரன் தரப்புக்கு எதிராக தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று கூறிய அவர், சசிகலாவும், தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றார். ஜெயலலிதா மரணமடைந்த போது தினகரன் அதிமுக உறுப்பினரே இல்லை என்றும் கூறினார் ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்.