Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கட்டட விபத்தில் பெற்றோரை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி

கட்டட விபத்தில் பெற்றோரை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், டவுன் கிராமத்தில் இன்று (3.9.2017) தனியாருக்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், இரண்டாவது தளத்தில் வசித்து வந்த கார்த்திக், அவருடைய மகன் சிறுவன் ஹரீஸ் மற்றும் பழனி, அவருடைய மனைவி ராஜாத்தி ஆகிய நான்கு நபர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக், சிறுவன் ஹரீஸ், பழனி மற்றும் அவருடைய மனைவி ராஜாத்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் பழனி என்வரின் ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தையின் எதிர்கால நலன் கருதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் வழங்கவும், இந்த தொகையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 4,062 ரூபாய் குழந்தை பரமேஸ்வரியின் பராமரிப்பு செலவிற்காக கிடைக்கப்பெறும்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக் மற்றும் சிறுவன் ஹரீஸ் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், அதாவது 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …