ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தலைமை கழகம் வந்து ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
அ.தி.மு.க. என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். இந்த இயக்கம் நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.அப்போது அ.தி.மு.க. மீது நீங்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை கிடைக்கும். அ.தி.மு.க. ராணுவ கட்டுகோப்புடன் உள்ள இயக்கமாகும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் தயங்குகிறேனா? எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்ற குழு விரைவில் முடிவு செய்யும்.
வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் முழு மனதுடன் போட்டியிடுவார். தேர்தலை சந்திக்க நாங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறோம். எந்த பணியையும் செய்ய அ.தி.மு.க. தொண்டர்கள் தயங்க மாட்டார்கள். இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.