Monday , November 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கி வைப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகக் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இது வரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

இதனடிப்படையில், 33 சதவீதத்திற்கு மேல் 50 லட்சத்து 35 ஆயிரத்து 127 ஏக்கர் நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு, நெற்பயிர் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 5,465- ரூபாய், மானாவாரிப் பயிர்களுக்கு 3,000 ரூபாய், நீண்டகாலப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000- ரூபாய் என்ற அடிப்படையில் இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்க 21.2.2017 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இன்று தலைமைச் செயலகத்தில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 31 மாவட்டங்களை சார்ந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகைகளை வழங்கினார்.

அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்துவதற்கு உடனடியாக கருவூலகங்களில் தகுந்த பட்டி யலை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படுகின்ற இந்த அரசு நடப்பாண்டில் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் 1,083 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச்செயலகத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும், நேரடியாகப் பிறருடன் பேசி தொடர்பு கொள்ள இயலாத நிலையிலுள்ள, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட, புற உலக சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்று முறை மூலம், பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் மாற்றுவழி தொடர்பு பகிர்வாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளுடன் கூடிய 25,000 ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணம் வழங்கும் சிறப்புத் திட்டம் நடப்பாண்டில் 49 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துவக்கி வைக்கும் வண்ணமாக ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சிறப்பு திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை மாவட்டம், பெரம்பூரில் வசித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவர் ராஜாராமுக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் வறிய பொருளாதார நிலையினைக் கருத்திற்கொண்டும் அன்னார் பட்டயக் கணக்கர் படிப்பு பயில உதவி செய்யும் வகையில் சிறப்பு நிகழ்வு உதவித் தொகையாக 3 லட்சம் ரூபாய் நிதியை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

புரட்சித் தலைவி அம்மா மாற்றுத் திறனாளிகளுக்கு 20,000- ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப் படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில், ஒரு மாவட்டத்திற்கு 30 எண்ணிக்கை என்ற அளவில் 960 நபர்களுக்கு 1 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டத்தின் துவக்கமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

பேருந்துகளில் பயணிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பேருந்து நிறுத்தத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் பேருந்தின் வருகையை அறிவதற்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை பொருத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சென்னை மாநகரத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அடிக்கடி பயணம் செய்யும் 10 வழித்தடங்களில் 75 அரசு பேருந்துகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவிகளை வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதற்கட்டமாக, சென்னை மாநகரத்தில் 10 வழித்தடங்களில் 75 அரசுப் பேருந்துகளில் இத்திட்டத்தினை துவக்கி வைத்து, பார்வை யற்ற மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …