ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஸ்டாலின் எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு துறையாக சீரழித்து வரும் குற்றவாளி சசிகலாவின் ‘பினாமி’ ஆட்சி இப்போது பொது விநியோகத் திட்டத்தையும் சீர்குலைத்து தாய்மார்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்காமல் இருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
20 கிலோ இலவச அரிசியும் முழுமையாக கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக 10 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்து, அதையும் உருப்படியாக வழங்குவதில்லை. முதல்வாரத்தில் கிடைக்கும் சில அத்தியாவசியப் பொருட்களும் இரண்டாவது வாரத்தில் கிடைப்பதில்லை என்ற அவல நிலை சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடருகிறது.
இதற்கிடையில் இந்த மாதத்தில் பருப்பு, பாமாயில் ரேசன் கடைகளில் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது, ஏழை எளிய மக்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஆதார் கார்டு இணைப்பு, புதிய ரேசன் கார்டுகள் வழங்குவது, கணக்கெடுப்பு நடத்துவது, சர்க்கரைக்கு மான்யம் ரத்து என்று பல்வேறு சங்கடங்களில் மூழ்கியுள்ள பொது விநியோகத் திட்டத்தின் கீழ் “விலையில்லா அரிசி” உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதும் இப்போதும் கேள்விக்குறியாகி விட்டது.
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் 1.11.2016 அன்று ‘ரகசியமாக’ கையெழுத்துப் போட்டுவிட்டு வந்த அதிமுக அரசை அப்போதே தட்டிக்கேட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.
இத்திட்டத்தில் சேர்ந்ததால் தமிழகத்திற்கு என்ன லாபம்? என்ன நஷ்டம் என்பதை விளக்கி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று கோரியது. தமிழக சட்ட மன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரையில் பேசியபோது, எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் இது பற்றி எடுத்துக்கூறி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டதால் மக்களுக்கான பொது விநியோகத் திட்டம் சிதைக்கப்பட்டு விடாமல் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
ஆனால் இது பற்றியெல்லாம் கண்டு கொள்ளாத குற்றவாளி சசிகலாவின் ‘பினாமி ஆட்சி’ இப்போது ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை வாங்குவதற்கு டெண்டரும் விடவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சென்றடையவில்லை. தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், “ஒரு ரேஷன் கடையில் 1000 ரேஷன் கார்டுகள் இருந்தால், 400 கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
ரேஷன் கடைகளுக்கு 100 சதவீதம் பொருட்கள் சப்ளை, லஞ்சம் வாங்காத அதிகாரிகள் மற்றும் எடை குறையாமல் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பினால் உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்திருப்பது பொது விநியோகத் திட்டம் எந்த அளவிற்கு மோசமாக செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாத நிலையில் இந்த ஆச்டி திணறி நிற்கிறது.
மொத்தத்தில் 5 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை மூழ்கடித்து, ஒவ்வொரு அமைச்சர்களும் ஊழல் மழையில் நனைந்து கொண்டிருப்பதால், இன்றைக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பினாமி ஆட்சி முழி பிதுங்கி நிற்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே பாராட்டியது. ஆனால் அந்த பொது விநியோகத் திட்டம் இன்றைக்கு ‘குற்றவாளி’ சசிகலாவின் பினாமி ஆட்சியில் ‘அனாதையாக’ நிற்பதைப் பார்த்து வேதனைப்படுகிறேன்.
ஆகவே “பினாமி ஆட்சியின்” அமைச்சர்கள், குற்றவாளிகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து, அடித்தட்டு மக்களை வாழ வைக்கும் பொது விநியோகத் திட்டத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு முறையாக, முழுமையாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்ட ஒரே காரணத்திற்காக தமிழகத்தை வஞ்சிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வாதாடி, தமிழக உரிமைகளை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த நேரத்தில் “தூங்கிக் கொண்டிருக்கும்” குற்றவாளி சசிகலாவின் ‘பினாமி’ ஆட்சிக்கு எச்சரிக்க விரும்புகிறேன்”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.