ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு
ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
தமிழகம் முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்எண்ணை மற்றும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரை, பாமாயில் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பொருட்கள் அனைத்தும் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று ஆய்வு செய்தார். காளவாசலில் உள்ள மதுரா கோட்ஸ் நியாய விலைக்கடைக்கு சென்ற அவர், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களையும், பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 1.85 கோடி குடும்பதாரர்களுக்கு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியில் செயல்படும் அரசு, விலையில்லா அரிசியை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதுபோல பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்எண்ணை ஆகியவை வழங்கப்படுகின்றன.
சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவையும் வழங்கப்படு கின்றன. இந்திய அளவில் இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது.
இதில் கடந்த மாதத்தில் (பிப்ரவரி) மட்டும் பொருட்கள் வழங்கப்பட வில்லை. ஏனென்றால் ஏழை மக்களுக்கு தரமான பொருட்களை பெற்று வினியோகிக்க வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இம்மாதம் (மார்ச்) இறுதிக்குள் துவரை, பாமாயில், உளுந்து ஆகியவை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம்தான் அனைவரும் பாராட்டும் வகையில் பொது வினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
ரேசன் கடையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்திகள்) வருவதாக புகார்கள் வருகின்றன. அப்படி தவறான குறுந்தகவல் வந்தால் 1967 என்ற டோல் பிரிவு நம்பருக்கு புகார் செய்யலாம். இந்த புகாரில் சிக்கும் ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது வினியோக திட்டத்திற்கு ரூ. 1,850 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.
ஆனாலும் ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்கள் வழங்க அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. குற்றச்சாட்டுகளை சுமத்தும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களை சந்தித்து விட்டு பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன், முன்னாள் மேயர் திரவியம், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வில்லாபுரம் ராஜா, பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் பரவை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.