காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடித்த கடும் வறட்சியால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 100 கன அடிக்கும் குறைவான அளவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 30 அடிக்கும் கீழாக குறைந்தது.
பல மாதங்களுக்கு பிறகு கடந்த 2 நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த தண்ணீர் செம்மண் நிறத்திலும், நுங்கும், நுரையுமாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் என அதிகரித்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. நேற்று அணைக்கு விநாடிக்கு 72 கன அடி வீதமாக இருந்த தண்ணீர் இன்று 165 கன அடி வீதம் தண்ணீராக அதிகரித்து உள்ளது.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 29.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 29.60 அடியாக குறைந்தது.