தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
குடியாத்தத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிருப்தியே உள்ளது. மக்களின் புதிய தேடலாக பா.ஜ.க உள்ளது.
வடமாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் ஆளுமை திறனுக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பா.ஜ.க.வை விரும்புகின்றனர். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழ போகிறது.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் கல்வித்தரத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. இதனால் வட மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக மோடி அலை வீசுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். விரைவில் கழகங்கள் இல்லாத மோடி ஆட்சி தமிழகத்தில் நடக்கும்.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மாற்றாக செயல்படுபவர்கள் தமிழகத்தில் பெருகி உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.