இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – தொல்.திருமாவளவன்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தை கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
இலங்கை மீதான போர் குற்ற விசாரணைக்கு இந்திய அரசு துணை போக கூடாது என்பதை வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக அவர் கோஷங்களை எழுப்பினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது தொடர்பாக போர்குற்ற விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகளை ஏற்ற முடியாது என்றும் சிங்கள நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு வலியுறுத்தி இருந்தது. அதே போல ஐ.நா. வழங்கிய கால அவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று 2 கோரிக்கைகளை வைத்து உள்ளது.
இதை அனுமதித்தால் தமிழர்களுக்கு எதிராக அமையும். அதனால் இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணை போகக் கூடாது. ராமேஸ்வரம் மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்கள் மீது ஒடுக்கு முறையை கட்டவிழுத்து விட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்.
இப்போது நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை கூறுவது மத்திய அரசு மீது திசை திருப்புவதாக உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சர்வதேச சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறி பா.ஜனதா ஆட்சி நடந்தாலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி சீறிசேனா ஆட்சி இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான நிலைபாட்டையே கொண்டு இருக்கிறார்கள். சுட்டுகொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு வழங்கிய ரூ.5 லட்சம் நிதி போதாது. ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே தீர்வு என்று அமைச்சர் ஜெயகுமார் கூறி உள்ளார். தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதில் தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் தமிழக மீனவர் சுட்டு கொன்றதை கண்டித்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.