பிரணாப் முகர்ஜி தாம்பரம் விமானப்படை தள விழாவில் பங்கேற்பு
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோர் குடியரசு தலைவரை வரவேற்றனர்.
இதை தொடர்ந்து இன்று காலை துவங்கிய தாம்பரம் விமானப்படை தள விழாவில் பிரணாப் பங்கேற்றுள்ளார். அவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
தாம்பரம் விமானப்படை தள விழாவில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்று கொண்டார். விமானப்படை தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவுக்கு தேசிய அங்கீகாரம் அளித்து கௌரவித்தார். இத்துடன் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கிறார் பிரணாப் முகர்ஜி. இதை தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது.
தாம்பரம் விமானப்படை தளம் மிகவும் பழமையானது வரலாற்று சிறப்புமிக்கது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தாம்பரம் விமானப்படை தளம் தான் முதுகெலும்பு. விமானப்படை தொழில்நுட்ப பிரிவிற்கு தேசிய அங்கீகாரம் வழங்கும் தருணம் இது.
நமது விமானப்படை வீரர்களின் சேவையை வெள்ளப்பாதிப்பின் போது பார்த்து தேசமே வியந்தது. பதான்கோட் படைத்தளம் தாக்கப்பட்ட போது நமது வீரர்களின் போர்க்குணம் வியப்புக்குரியது. தாம்பரம் விமானப்படையின் திறன் இப்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. விமானப்படையின் சேவைக்கு தலைவணங்குகிறேன்.
இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது. இந்திய ராணுவப்படைகள் எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடியவை.
இவ்வாறு அவர் பேசினார்.
குடியரசு தலைவரின் உரை நிறைவுற்றதும் பிரணாப் முகர்ஜிக்கு தாம்பரம் விமானப்படை தள தொடி அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வானில் விமானப்படை வீரர்களின் சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.