விழுப்புரம்: நீட்டுக்கு எதிராக அரசு ஆசிரியை வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுய்பட்டுக்கொண்டிருந்த போது, போலீசார் அவருடைய வீட்டுக்குள் சென்று மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராடுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
அதையடுத்து, தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மேலும் இன்று ஒருநாள் மட்டும் அவர் வீட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சிலர் வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில், போலீசார் சபரிமாலா வீட்டுக்கே சென்று போராட்டம் நடத்தும் சபரிமாலாவை எச்சரிக்கும் விதத்தில் பேசினர். மேலும், சபரிமாலாவைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது எனவும் கூறி அங்கிருந்த சிலரை வெளியே போகக் கூறினர்.
வீட்டுக்குள் நடத்தும் போராட்டத்துக்கும் அனுமதி வாங்க வேண்டும் என போலீசார் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினர்.