சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டது கட்சியின் சட்ட விதிகளின் படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனிடம் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் புகார் மனு கொடுத்தனர்.
இதையடுத்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா சார்பில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமிஷனுக்கு விளக்க கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது விளக்கத்தை தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்து விட்டது.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்தபடி சசிகலா தனது வக்கீல் மூலம் 70 பக்க விளக்க கடிதத்தை கடந்த 10-ந்தேதி தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்தார்.அந்த விளக்க கடிதத்தில், தன்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முன் மொழிந்தவர்களும், வழி மொழிந்தவர்களும் அரசியல் ஆதாயத்திற்காக புகார் செய்துள்ளனர். எனது நியமனத்துக்கு எதிரான மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. எனவே அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
சசிகலா அனுப்பிய விளக்க கடிதத்துக்கு பதில் கடிதம் பன்னீர்செல்வம் அணியினர் தயார் செய்தனர். 61 பக்க அந்த பதில் மனுவை மைத்ரேயன் எம்.பி. தலைமையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் இன்று வழங்கினார்கள்.
இதையடுத்து தேர்தல் கமிஷன் இதனை ஆராய்ந்து உரிய சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கும்.இதற்கிடையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.