Saturday , July 5 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ”எனது அன்புக்குரிய அதிமுக அமைச்சர்களே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!

கடந்த 07.02.2017 அன்றிரவு, உங்கள் அன்புச் சகோதரன் ஆகிய நான், ஜெயலலிதாவின் நினைவகத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்னர் ஜெயலலிதாவின் ஆன்மா எனக்கு அளித்த மானசீக உத்தரவின் பேரில், எனது மனதில் அடக்கி வைத்திருந்த சில உண்மைகளை செய்தியாளர்கள் மூலம் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்தேன்.

இதனைத் தொடர்ந்து எனது நிலைப்பாட்டிற்கு மாநிலம் முழுவதும் கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எம்ஜிஆரால் துவக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காத்து, வளர்க்கப்பட்டு வந்த நமது மாபெரும் அதிமுக இயக்கத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்த அன்று இரவு உங்கள் அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கனத்த இதயத்துடன் முதல்வராகப் பதவியை ஏற்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு ஜெயலலிதா வழியில், கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் இல்லை என்ற குறை பொதுமக்களுக்கு தெரியாதவாறு தொடர்ந்து நடத்தி வந்தோம். ஜெ.வின் ஆட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வந்தனர்.

நாம் யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் கடந்த சில நாட்களாக நமது ஜெ.வின் ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்கு தொடர்வதில் தற்காலிக இடையூறு மட்டுமே ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கி, நாம் அனைவரும் ஒன்றுமையுடன் இருந்து கழகத்திற்கு எவ்வித ஊறும் ஏற்படாமல் காத்து ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தேவையானவற்றை நம் மனசாட்சிபடி உடனடியாக மேற்கொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். இதுவே மானசீகமாக ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

நமது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களாலும், மக்கள் அவர் மீது வைத்திருந்த எல்லையில்லா அன்பினாலும் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பொதுமக்கள் இரண்டாவது முறையாக நம் அனைவரையும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி அமைய வாய்ப்பினை வழங்கினார்கள்.

காலத்தின் சதியினால் ஜெயலலிதா நம்மிடையே இருந்து தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் வழியில், ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டுமென்ற காரணத்தினாலேயே நமக்கு வாக்களித்து நம்மை வெற்றி பெறச் செய்தனர்.

தற்போது ஜெயலலிதா நம்மிடையே இல்லாத சூழ்நிலையில், பொதுமக்கள், குறிப்பாக அதிமுக வெற்றிக்காக அல்லும், பகலும் கண் அயராது உழைத்த நமது கழக கண்மணிகள் அனைவரும் எதை விரும்புகின்றனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியிலேயே செல்வது தான் சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நமது அனைவரின் கடமையாகும். இதுவே நமது மாநிலத்திற்கும் நலம் சேர்க்கும்.

எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர அவர்கள் அனைவரது ஆதரவும் நமக்கு இன்றியமையாததாகும்.

எனவே, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கழக ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சித் தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது என்பதை நான் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை எம்.ஜி.ஆர். ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் என்றும் மன்னிக்காது.

ஜெயலலிதா தங்கள் வாழ் நாள் முழுவதும் எக்கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அதைத் தொடர்ந்து கடைபிடித்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையுடன் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

ஜெயலலிதாவின் புகழையும், எம்.ஜி.ஆர். புகழையும் என்றென்றும் அழியாது காத்து மேன்மேலும் ஓங்கச் செய்திட அதிமுக கண்மணிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …