திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கேக்கரையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப் பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் அங்கு நடைபெற்று வந்த பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு நிலம், நீர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், தி.மு.க. நகர செயலாளர் வாரைபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சற்று பதட்டம் ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக பணிகள் மேற்கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.