ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
3 முறை முதல்- அமைச்சர் இருக்கையில் தன்னை -அமர வைத்த இயக்கம் 4-ம் முறையிலான வாய்ப்பை தனக்கே தரவில்லை என்பதற்காகவே தன்னை வாழவைத்த இயக்கத்தையே அழிப்பதற்கு கழகத்தின் எதிரிகளோடு கூடிச் சேர்ந்து, திரை மறைவில் துரோகச் சதியில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தின் மொத்த முகமூடியும் முழுவதுமாக கிழிந்து தொங்குகிற நிலையில், `அம்மாவின் மரணத்தில் மர்மம் என்கிற அவதூறு பிரச்சாரத்தை முன்வைத்து பிழைக்கப் பார்க்கிறார்.
நம் அம்மா கட்டிக் காத்த தனி மனிதச் சுதந்திரத்தை பன்னீர்செல்வம் தமது பதவி பேராசைக்காக பலிகொடுப்பதோடு, மருத்துவத் தொழிலையே களங்கப்படுத்தியும், உயிர் காக்கும் மருத்துவர்களை ஏதோ கூலிப் படையினர் போல சித்தரித்தும் வருகிறார்.
மேலும், எம்.ஜி.ஆர். மரணத்தின் போது கழகத்தைப் பிளக்க துரோகக் கோடாரிகளாக செயல்பட்டவர்களையும், அம்மாவிடம் பதவி சுகங்களை பெற்றுவிட்டு, அவருக்கே துரோகம் இழைத்தவர்களையும், கழகம் என்னும் கழனியில் விஷக் கிருமிகளாக முளைத்த வில்லன்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு பன்னீர், அம்மா கட்டிக் காத்த இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்கப் பார்க்கிறார் என்றால், அவரை வங்கத்துக் கடலோரம் உறங்குகிற வாழும் தெய்வமாம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மா ஒருநாளும் மன்னிக்காது.’
அம்மா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே முதலமைச்சரின் பொறுப்புகள் அனைத்தும் பன்னீரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அம்மாவின் ஆரோக்கியம் மீட்பதற்காக இந்த பன்னீர் எத்தனை முறை அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தார்?
அயல் நாட்டிற்கு அம்மாவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று எத்தனை முறை அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்தினார்? அப்போதே அம்மாவின் அதிகாரங்களை தம்வசத்தில் நிரந்தரப்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளையும், வழிபாடு, பூஜைகளையும் திரைமறைவில் நடத்திக் கொண்டு, அப்போதே தி.மு.கவுடன் மறைமுக ஒப்பந்தத்திலும் துரோகப் பன்னீர் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதெல்லாம் இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
தான் ஒரு தி.மு.கவின் ‘பி’ டீம் என்பதையும் மகா நடிகர் பன்னீர் தமது செயல்பாடுகள் மூலம் தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்திவிட்டார். அதே வேளையில், 1977, 1980, 1984 என மூன்று முறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. அரியணை ஏறியதென்றால், 1991, 2001, 2011, 2016 என நான்கு முறை தி.மு.க-வை வீழ்த்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரமாய் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு அம்மாவுக்கு உடன் நின்று உழைத்ததும், கூட்டணி மேகங்களைத் திரட்டுவதும், வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதும், தயாரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பட்டியலாய் மாற்றுவதற்கு ஓய்வின்றி உழைத்ததும் என, 33 வருடங்கள் ஆளுமை மிக்க அம்மாவுக்கு அப்பழுக்கில்லாத தோழமையாக உழைத்தவர் சின்னம்மா என்பதையெல்லாம் கழகத்தின் மனச்சாட்சியுள்ள தொண்டன் மறுக்க மாட்டான்.
அத்தகைய தியாகங்களுக்குச் சொந்தக்காரரான சசிகலாவை, அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று எழுதிக் கொடுத்தார்” என்ற ஒரே பல்லவியை திரும்பத் திரும்பப் பாடுகிற பன்னீர்செல்வம், தி.மு.கவோடும், துரோகிகளோடும் கூட்டு சேர்ந்துகொண்டார் என்பதைக் கண்டு கொதித்தெழுந்த கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தானே சசிகலாவை கழகத்தின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் தலைமையேற்க வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார்கள்? அதைத் தொடர்ந்து தானே கழகத்தை பன்னீரின் துரோகத் திடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவை சசிகலா எடுத்தார் என்பதையும் மக்கள் அறிவார்களே!
அம்மா மரணமடைந்த டிசம்பர் 5-ந் தேதியன்று யாரால் முதலமைச்சர் ஆனார், யாரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்பதையும், அதைத் தொடர்ந்து தினமும் போயஸ் இல்லத்திற்கு வந்து சின்னம்மா அவர்களுக்கு, அவர் எதற்காக நன்றி செலுத்துவதாக நடித்தார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியது பன்னீர்தான்.