ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு – பொதுமக்கள் அதிர்ச்சி
ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தென்வீக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள தேவாமங்கலம், குருவாலப்பர் கோவில், புதுக்குடி, பூவாயிக்குளம் ஆகிய இடங்களில் மீத்தேன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆய்வுக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து, பரிசோதனை செய்யப்பட உள்ளது. புதுக்குடி கிராம மக்கள் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி விட்டனர்.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட மற்ற 5 இடங்களில் ஒன்றான விழப்பள்ளத்தில் தென்வீக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது நிலத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எரிவாயு பரிசோதனை ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து கடந்த 2 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு திருநாவுக்கரசு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு போலீசார் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வந்து வாயு கசிவு ஏற்படுவதை தடுக்க அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் வாயு கசிவது சரி செய்யப்பட்டது. அதன் பிறகே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் மீத்தேன் திட்ட ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




