மீண்டும் மெரினாவில் போராட்டம்! பொலிசார் குவிப்பு ?
சென்னை மெரினாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த 17 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டத்தின் இறுதியில் கலவரம் வெடித்தது. இதனையடுத்து, மெரினாவில் போராட்டம் நடத்த 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் கூட திட்டமிட்டிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மெரினா பகுதியில் போராட்டக்காரர்கள் கூடாத வண்ணம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.