திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வைகோ இன்று கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். வைகோ கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுடனும் கருணாநிதியுடனும் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் கட்சிப் பணியாற்றிய வரலாற்றையும் சுருக்கமாகவும் நெகிழ்ச்சியோடும் பேசினார். கருணாநிதிக்காக தான் மெய்க்காப்பாளர் படை அமைத்ததாக வைகோ கூறினார். 23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்ததாகவும் தெரிவித்தார். கருணாநிதி மீது துரும்பு கூட விழ அனுமதிக்காமல் இருந்தேன் என்றும் கூறினார்.
தம்பி வைகோவுக்கு என்று முதன் முதலாக கருணாநிதிதான் எழுதியதாகவும், வைகோ என்ற பெயரை அவர்தான் சூட்டியதாகவும் தெரிவித்தார். தான் ஈழத்திற்கு சென்ற போது, திரும்பி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பியை பறிகொடுத்து விட்டு தவிப்பதாக கருணாநிதி கூறினார் என வைகோ நினைவு கூர்ந்தார். தனது நெஞ்சின் அடியாழத்தில் கருணாநிதி இருப்பதாகவும் தன்னை வார்ப்பித்தவரும் வளர்த்தவரும் கருணாநிதிதான் என்றும் வைகோ கூறினார்.
கருணாநிதியைப் பார்த்த போது அவர் தனது கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டதாகவும், அவருக்கும் தனக்கும் கண்ணீர் வந்ததாகவும் வைகோ கூறினார். கடந்த 2 மாத காலமாக கருணாநிதி தினமும் கனவில் வருவதாகவும் வைகோ தெரிவித்தார். முரசொலி விழாவுக்கு தனக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பதாகவும், அதில் தான் கலந்து கொள்ளப் போவதாகவும் வைகோ கூறினார். கருணாநிதி நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். அவரின் மணியோசைக் குரல் மீண்டும் ஒலிக்கும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.