முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் திரளாக கலந்துகொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடையும் தருவாயில் இருப்பதாக என்னிடம் யாரும் கூறவில்லை. மரணம்
அடை வாய்ப்பு உள்ளதாக என்னிடம் தெரிவித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியதை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் சுகதாரத்துறை செயலாளர் மீது வழக்கு தொடருவேன்.
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடந்தால் மட்டுமே உண்மை வெளிவரும். ஜெலலிதா மரணம் குறித்து என்னிடம் தாராளமாக விசாரணை நடத்தலாம். உண்மை வெளிவரும் பட்சத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரே முதல் குற்றவாளியாக இருப்பார்.
டிசம்பர் 5-ம் தேதி மாலை 4.30-க்கு ஜெயலலிதா இறந்தாக 6.30 மணிக்கு எனக்கு தகவல் வந்தது. 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு உள்ளது. ஆனால், 7.5 கோடி தமிழர்களின் ஆதரவு எங்க்ளுக்கே உள்ளது.
எனவே, சசிகலாவின் பிடியில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் மீட்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும்வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் பேசி முடித்ததும் மாலையில் உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்தது. தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.