Saturday , November 16 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும்

ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும்

திண்டுக்கல்: மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று பொய் சொன்னதாகவும் சொல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு டி.டி.வி. தினகரன் குடகில் பதிலளித்து பேசும் போது, அமைச்சர் சீனிவாசன் பதவி ஆசைக்காக மாற்றி மாற்றி பேசுவதாகவும், அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதே சசிகலாதான் என்றும் கூறினார்.

டி.டி.வி. தினகரனுக்கு பதிலடி தரும் வகையில் திண்டுக்கல்லில் இன்று தூய்மையே சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது சசிகலா ஆதரவு நிலையில் இருந்த கட்சி நிர்வாகிகள் எதை கூறினார்களோ அதையேதான் நாங்களும் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும் போது கட்சி நிர்வாகிகள் முரண்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்ததை நாங்கள் ஆமோதித்தது போல இருந்து விட்டோம்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய காலத்தில் இருந்து நான் கட்சியில் இருந்து வருகிறேன். அவரது ஆட்சி காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் எனக்கு பல்வேறு பதவிகளை அவர்கள் வழங்கியுள்ளனர். 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளேன். கட்சியில் பல பதவிகளை மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எனக்கு வழங்கியுள்ளனர். அதன்படியே கடந்த சட்டமன்ற தேர்தலில் என்னை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக ஜெயலலிதா நிறுத்தி வெற்றி பெற வைத்தார். எனக்கு அமைச்சர் பதவியையும் அவரே வழங்கி அழகுபார்த்தார். இதற்கு வேறு யாரும் காரணம் அல்ல.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையின் வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தினகரனும், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்தும் கூறுகின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். இந்த விசாரணையில் அனைத்து வீடியோ ஆதாரங்களும் வெளிவரும். யாரும் வீடியோ ஆதாரத்தை மறைத்து வைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த விசாரணை கமிஷனே விரைவில் தனது விசாரணையை தொடங்க உள்ளது.

எனவே ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விசாரணை அறிக்கை முடிவில் கண்டிப்பாக வெளிவரும். வீடியோ ஆதாரம் உள்பட எந்த ஆதாரம் வைத்திருந்தாலும் அதனை விசாரணை கமிஷனில் அளிக்கலாம் என்றார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …