சென்னையில் நாளை மறுநாள் (செப். 5-ம் தேதி) அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுக்குழுவில் கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என டிடிவி தினகரன் எச்சரித்த நிலையில் மீண்டும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு?
கடந்த முறை நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின்போது தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி கூட்டத்தில் பங்கேற்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்புவிடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவையைக் கூட்டி முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.