ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை
தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாமல் மிகவும் வறட்சியுடன் காணப்படுகிறது.
தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஏற்காட்டில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக இரவு 10 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை நள்ளிரவு 12 மணிவரை பெய்தது. பின்னர் அதிகாலை 4 மணி வரை லேசான தூறலுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் இதமான சீதோஷ்ண உருவாகி ஏற்காடு முழுவதும் மேகமூட்டதுடன் காணப்பட்டது.
இந்த மழையினால் சுற்றுலா பயணிகள், காப்பித்தோட்ட உரிமையாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், தண்ணீர் குறைவாக காணப்பட்ட படகு இல்ல ஏரியில் இந்த மழையின் காரணமாக நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. குடிநீர் எடுக்கும் கிணறுகளில் வறண்டு காணப்பட்ட நிலையில் இருந்தது. நேற்று பெய்த மழையினால் கிணறுகளில் ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கியது.
இந்த குளு,குளு சீசனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கெங்கவல்லியில் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணிநேரம் தொடர்ந்து பெய்ததால் அங்குள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூர் மற்றும் க.ராமநாதபுரம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதுபோன்று எடப்பாடி, ஜலகண்டாபுரம், காடையம் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை சுமார் அரை மணிநேரம் பெய்தது. ஜலகண்டபுரம் பகுதிகளில் இரவு 8 மணிக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுபோல் சேலத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.