ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார்
சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை இறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநில அரசின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. அவ்வகையில், டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு விகிதங்கள் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்படும் வகையில் உள்ளதாக எடுத்துக் கூறினாம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
வருவாயில் நடுநிலை விகிதங்களை ஏற்படுத்த வேண்டும், மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட தனி அமைப்பை உருவாக்கவேண்டும், வரி இழப்புகளால் ஏற்படும் இழப்புகளை சமாளிப்பது குறித்து விளக்கம் தரவேண்டும், ஜி.எஸ்.டி.யில் இருந்து மதுபானம், பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி.யால் உற்பத்தி அதிகம் உள்ள மாநிலங்களின் வருவாய் பாதிக்கும்.
தமிழக அரசின் திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், ஜி.எஸ்.டி.க்கு தமிழகம் ஆதரவு தந்தது. தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய கூட்டத்தில் மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.