முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு
‘இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை’- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர்.
சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார்.
இதுவரை அவரது மவுனத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது தீர்ப்புக்குப் பின்னரும் அவர் மவுனம் காப்பது பல்வேறு ஊகங்களுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய அரசியல் பரபரப்பு இன்றளவும் நீடிக்கிறது. போயஸ் தோட்டத்தில் நிசப்தம், பிதுங்கி வழிந்த கிரீன்வேஸ் சாலையில் ஒருவிதமான அமைதி என சிற்சில மாறுதல்கள் மட்டும் ஏற்பட்டிருக்கின்றனவே தவிர முடங்கிப்போன அரசாகவே தமிழக அரசு இருக்கிறது.