தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களிடம் மாவட்ட கலெக்டர் நடராஜ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வந்து மீனவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தினந்தோறும் பல்வேறு கட்சியின் தலைவர்கள், அமைப்பினர் தங்கச்சிமடத்துக்கு வந்து செல்கின்றனர். நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், தமழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்து பேசினர்.
3 நாளாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
4-வது நாளான இன்று மீனவர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பலர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் 3 வேளையும் உணவும் வழங்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற ராமேசுவரம் விவேகானந்தா குடில் நிர்வாகி பிரணவநந்தா நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தங்கச்சி மடத்துக்கு வருகிறார்.