ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் கேட் கில்மோருக்கு, மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 35–வது கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நிகழ்வுகள் காரணமாக கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமைக்கு எனது மனப்பூர்வமான வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நடைபெற்ற போரில் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது சம்பந்தமாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் இதுவரை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. பாரபட்சமற்ற, சுதந்திரமான, சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்ட பிறகும் இன்று வரை இலங்கை அரசு தனது தார்மீக மற்றும் அரசியல் சட்டரீதியான பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் தட்டிக்கழித்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் சுயமரியாதையுடன், கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற அரசியல்ரீதியான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது இலங்கை அரசு.
கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர்
இதில் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால், இன்று வரை தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். தமிழ் இளைஞர்கள் இன்றும் கொடூரமான உள்ளூர் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
மேலும், தமிழர் வாழும் 18 ஆயிரத்து 800 சதுர கிலோமீட்டரில் 7 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச மனித உரிமை சாசனங்களான ‘‘உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்’’, ‘‘பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை’’ மற்றும் ‘‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை’’ ஆகியவை இலங்கை அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும் திட்டமிட்டு மீறப்பட்டு தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு தக்கதொரு நியாயத்தை பெற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது அமைந்திருக்கிறது.
எனவே, தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நம்பகமான, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என இச்சமயத்தில் கோருகிறேன். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ, இலங்கையில் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு அவர்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.
அப்படி ஒரு தீர்வை, வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான அமர்வில், மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.