கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் – சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம்
கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் பரீட்சார்த்த முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் காலத்திற்கேற்ப புதிய மாற்றங்களை செயல் படுத்தி வருகிறது.
இந்த மருத்துவ பல்கலை கழகத்தில் பல் மருத்துவம் மற்றும் எம்.சி.எச்., டி.எம். போன்ற பட்ட உயர்படிப்புகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்கள் ஆண்டு தோறும் 3 லட்சம் திருத்தம் செய்வதற்கு வருகிறது.
இதுவரையில் மருத்துவ பேராசிரியர்கள் விடைத் தாள்களை கையினால் திருத்தி மதிப்பெண் வழங்கினார்கள்.
தற்போது கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் புதிய திட்டம் பரீட்சார்த்த முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல் கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பல்கலைக்கழகத்தின் 2-வது மாடியில் இதற்காக 20 கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அறையில் விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் விடைத்தாள்களை திருத்தம் செய்வதை கீதா லட்சுமி பார்த்தார்.
பின்னர் புதிய திட்டம் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கம்ப்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் திருத்தம் செய்வதற்கு நவீன் சாப்ட்வேர் மற்றும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அவை விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கொள்வதோடு டம்மி எண், செக்குரிட்டி எண் போன்றவற்றை ஒதுக்கி தந்து விடும். எந்த மாணவருடைய விடைத்தாள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மணிபால் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பிறகு அடுத்ததாக எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை கழகத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையில் தவறான மதிப்பெண் வழங்கினாலோ, பதிவு செய்யாமல் விட்டாலோ தெரிவித்து விடும். எளிதாக பிழைகள் இல்லாமல், தவறுக்கு இடம் இல்லாமல் இதன் மூலம் விடைத்தாள் திருத்தம் செய்ய முடியும்.
விடைத்தாள் திருத்துவோர் கவனக்குறைவாக ஈடுபட்டாலும் இதில் தவறு ஏற்படாது. அந்த அளவிற்கு மிக துல்லியமாக திருத்தம் செய்யப்படும். ஒரு நாளைக்கு 45 விடைத்தாள்களை ஒருவர் திருத்த முடியும்.
அதற்கு மேலாக திருத்தம் செய்யக்கூடாது. மேலும் இதன் மூலம் ரகசியம் பாதுகாக்கப்படும்.
விடைத்தாளை திருத்தம் செய்யும் போது ஒவ்வொரு வினாவிற்கும் சரியான விடை எழுதப்பட்டுள்ளதா என்பதை பார்க்க கம்ப்யூட்டரில் ‘ஆன்சர் கீ’யும் தெரியும். அதை பார்த்து கொண்டே திருத்தம் செய்யலாம்.
விடை தெளிவாக தெரியவில்லை என்றாலும் அதனை பெரிய அளவில் உருவாக்கி பார்க்கும் வசதி உள்ளது. கூட்டல் தவறுக்கு இடமில்லை.
விடைத்தாள் 2-வது முறையாக திருத்தம் செய்யப்படுகிறதா என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. இது போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த நவீன வசதியில் கிடைத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை வேந்தருடன் பதிவாளர் டாக்டர் பால சுப்பிரமணியம் உடனிருந்தார்.




