நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கி இருக்கிறார். நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்-நடிகைகள் சமூக வலைத்தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர். இயக்குனர்கள் பலர் அரியலூர் சென்று அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். அஞ்சலி கூட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு இருக்க நடிகர் ராகவா லாரன்ஸ் அனிதா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். இந்த தொகைக்கான காசோலையை லாரன்சின் உதவியாளர்கள் அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்கள்.