தமிழக அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் எனக் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் எப்போதும் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப தலையீடு இல்லாமல்தான் கட்சி, ஆட்சியை வழி நடத்தி வருகிறோம்.
பன்னீர்செல்வம் அணியினர் கருத்து வேறுபாடுகளை மறந்து பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம்.” எனக் கூறினார்.
அதிமுகவினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறிய அவர், அதிமுக அணிகள் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைத்து பார்க்க விரும்பவில்லை எனக் கூறிய அவர், 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் நீக்கபட்ட டிடிவி தினகரன் எப்படி துணைப்பொது செயலாளராக முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்பதால் அவரின் பதவி செல்லுபடியாகாது என்றும், எம்.ஜிஆருக்கு விழா கொண்டாட தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் எனவும் ஜெயக்குமார் கூறினார்.