சென்னை: ”மாமியார் வீட்டுக்கு, நான் பலமுறை சென்று வந்து விட்டேன். ஆட்சி கலைக்கப்பட்டதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி,” என, தினகரன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி போல அவர் பேசியது, சுற்றி இருந்தவர்களைநகைப்புக்குள்ளாக்கியது.
சென்னையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில் நடந்த, அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘தினகரன், விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்’ என்றார்.அதற்கு பதில் அளித்து,
நேற்று சென்னையில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதும், நேராக, மாமியார் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். அந்த பயம் காரணமாக,என்னை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டால், அவர்கள் தப்பி விடலாம் என நினைக்கின்றனர்.மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி, பைனான்ஷியர் அன்புநாதன் விஷயத்தில் மாட்டியவர்கள் பயப்படுகின்றனர்.
நான், பலமுறை மாமியார் வீட்டிற்கு சென்று வந்தவன்; இது, மக்களுக்கும் தெரியும். மாமியார் வீட்டை சந்தித்து, வெற்றிகரமாக வெளியே வந்து, மக்களை சந்தித்து, ஜெயலலிதாவால் எம்.பி., ஆக்கப்பட்டேன்.என் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்து,என்னை மாமியார் வீட்டிற்கு அனுப்பினர்.
பொதுமக்கள் பணம் எதையும் கொள்ளையடித்ததாக, என் மீது வழக்கு கிடையாது.எனவே, ஆட்சியில் இருப்பவர்கள், வீட்டிற்கு போவது உறுதி.
அவர்களில் பலர், மாமியார் வீட்டிற்கு செல்வதும் உறுதி.
இவ்வாறு தினகரன் கூறினார்.தினகரன் பேச்சை கேட்டு, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
‘எதற்காகச் சிரிக்கிறீர்கள்?’ என, நிருபர் ஒருவர் கேட்க, ‘பெரிய சுதந்திரப் போராட்ட தியாகி, நாட்டுக்காக போராடி, சிறைக்குச் சென்றதைப் போல தன்னையும் உருவகப்படுத்திபேசுகிறார். இவர் எதற்காகச் சிறை சென்றார் என்பது, நமக்குத் தெரியாதா…’ எனக் கூறி, சிரிப்பை அடக்க முடியாமல் நகர்ந்தனர்.