தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் :
முதல்வராக இருக்கும் ஒருவரே தன்னை மிரட்டுகிறார்கள் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதல்வராக இருக்கும் தன்னையே பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருப்பது தமிழகத்தில் இத்தகைய சூழ்நிலை நிழவுவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இத்தகைய சூழ்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலையில் சசிகலா உள்ளார். அவர் தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
எம்.பி., சசிகலா புஷ்பா : ஒரு குடும்பத்தினர் தங்களின் ஆதாயத்திற்காக கட்சியில் உள்ளவர்களை மிரட்டி பணியவைப்பது, ராஜினாமா செய்ய வைப்பது ஏற்க முடியாது. இதில் என்னை போல் ஓ.பன்னீர்செல்வமும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையால் அவரை நேற்று தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்திற்கு இப்போது தான் தீபாவளி போல் உள்ளது.
பா.ஜ., தலைவர் சுப்ரமணியசாமி : மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என பன்னீர்செல்வம் கூறுவது அபத்தமானது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் : திமுக மீது பாய்வதை விட்டு, திராணி இருந்தால் பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு சசிகலா பதில் சொல்லட்டும். குறுக்கு வழியில் முதல்வர் ஆக முடியவில்லையே என ஏக்கத்தில் சசிகலா திமுக.,வை விமர்சிக்கிறார்.
தி.மு.க., காரணமில்லை:
டில்லியில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கூறியதாவது: முதல்வர் பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலுக்கு முடிவு காண வேண்டும். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சூழலுக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.