கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பின் செயலாளரான கதிர்மதியோன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதில் கூறி இருந்ததாவது:–
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரித்து அதன்மூலம் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் சாலைகளை ஆக்கிரமித்து விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சிக்னல்களின் அருகே சாலை விதிகளுக்குப் புறம்பாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பர பலகைகளில் வண்ணமயமான விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளின்படி சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. ஆனால், இந்த விதிகளை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை.
தனியார் நிறுவனங்களிடம் உள்ளாட்சி அமைப்புகளும், காவல்துறையினரும் பணம் பெற்றுக்கொண்டு இஷ்டத்திற்கு விளம்பர பலகைகளை சாலைகளை ஆக்கிரமித்து வைக்க அனுமதிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள், சந்திப்புகள், போக்குவரத்து சிக்கனல்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். அதேபோன்று அந்த இடங்களில் புதிதாக விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கொடுத்திருந்தால் அவற்றின் அனுமதி காலம் முடிந்த பின்னர் அவற்றை அகற்ற வேண்டும் என்றும், அனுமதியை புதுப்பிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
உயிருடன் இருப்பவர்களின் படங்கள் பேனர்களில் இடம்பெற தடை விதித்து சமீபத்தில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.