தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாறுதல் வரும்: துரைமுருகன்
தமிழகத்தில் விரைவில் பெரிய மாறுதல் வரப்போகிறது. தமிழகத்தின் அரசியல் 25 ஆண்டுகள் தளபதி மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது.
கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் முன்னிலை வகித்தார். மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.உதயசூரியன் வரவேற்றனர்.
கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக போட்டா போட்டி அரசியல்தான் நடைபெறுகிறது. எம்.எல். ஏ.க்களை ஆடு, மாடு போல ரிசார்டுகளில் கடத்தி அடைத்து வைத்தல், பண பட்டுவாடா செய்தல் நடை பெறுகிறது. தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எதுவும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் விரைவில் பெரிய மாறுதல் வரப்போகிறது. தேர்தல் வரும். தமிழகத்தின் அரசியல் 25 ஆண்டுகள் தளபதி மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும்.
கலைஞரை போல ஆளுமை திறன்மிக்கவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அவருக்கு நிகர் யாரும் இல்லை. இந்த முறை நாம் ஆட்சிக்கு வந்தால் இன்னும் 25 ஆண்டு காலம் கட்சியிலும் ஆட்சியிலும் அமரும் சூழ்நிலை உருவாகும்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
கூட்டத்தில் கோ.வி. செழியன், சேலம் சுஜாதா, பி.பொன்னுரங்கம், ஜெ. ஜானகிராமன், பாபா சுரேஷ், சோமசுந்தரம், நாதன், வெல்டிங்மணி, வி.பி. எஸ்.ஜெனார்த்தா, பி.ஜெயக் குமார், பி.மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.