இந்தியாவில் தற்போது ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தற்கொலை விளையாட்டு என்றழைக்கப்படும் இந்த விளையாட்டுக்கு மாணவ–மாணவிகள் அடிமையாகி இருப்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும், இந்த விளையாட்டு ஒழிந்தபாடில்லை. இந்தியாவில் இந்த விளையாட்டால் ஏராளமான மாணவ–மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த விபரீத விளையாட்டானது, 50 நாட்களை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளை பிறப்பிக்கப்படும். அந்த கட்டளைகளை செய்யும் மாணவர்கள் அதை புகைப்படம் எடுத்தோ, வீடியோ எடுத்தோ பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், கைகளை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடி விளிம்பில் நடப்பது, இரவில் தனியாக சுடுகாட்டுக்கு செல்வது போன்ற பயங்கரமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. 50–வது நாள் கட்டளையானது தற்கொலை என்பதை அறியாத மாணவ–மாணவிகள் இறுதியில் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் புளூவேல் விளையாட்டால் மத்திய பிரதேசம் மாநிலம் தமோஹா நகரை சேர்ந்த +1 மாணவர் சாத்விக் பாண்டே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சாத்விக் பாண்டே எப்போதும் புளூவேல் விளையாடி கொண்டு இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் புளூவேல் விளையாட்டால் ஏராளமான மாணவ–மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.