நெல்லை சந்திப்பு பகுதியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு, 37 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் அச்சமடைய வைத்துள்ளது.
நெல்லை சந்திப்பு செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் வல்லவன். இவரது மனைவி கோமதி. நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருமண பத்திரிக்கை வைப்பது போல் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர், கோமதியை கட்டையால் தாக்கினர்.
பின்னர் வீட்டிலிருந்த மின் ஒயரில் கட்டிப்போட்டுவிட்டு, கோமதி கழுத்தில் இருந்த 12 சவரன் தாலி மற்றும் பீரோவில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர்.
வீட்டிற்கு வந்த கோமதியின் மகன், தாய் கட்டிப்போடப்பட்டிருந்ததை கண்டு, சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் கோமதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த வாரம், தொடர்ந்து மூன்று வீடுகளில் ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களை கட்டிப்போட்டு, நகை பணம் கொள்ளையடித்த சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, நெல்லை மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
https://www.youtube.com/watch?v=QoP47bdsCN0