மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு
சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். தி.மு.க.வினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தமிழக முழுவதும் பரவியது. இதனால் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, ஈரோடு, தஞ்சாவூர் போன்ற இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடைபெற்றது. இதனால் சில இடங்களில் அசாதாரண நிலை ஏற்பட்டு வருகிறது.