அதிமுக எம்.பி. மைத்ரேயனின் மனதில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள அனைவரின் மனதிலும் வரும், என டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் டிடிவி தினகரன் இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், கோவை, வேலூர், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 56 மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து, வரும் 24ம் தேதி முதல் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அனைத்து அறைகூவல்களையும் சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், நாஞ்சில் சம்பத் கூறினார்.
பின்னர் ஃபேஸ்புக் பக்கத்தில் அதிமுக எம்.பி. மைத்ரேயன், ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து தெரிவித்திருந்த பதிவுக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத் மைத்ரேயனின் மனதில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிலநடுக்கம் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் அனைவரின் மனதிலும் விரைவில் ஏற்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்