அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். அவரை நீக்குவதும், சேர்ப்பதும் அவர்கள் உரிமை” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார்.
தினகரனின் நியமனம் செல்லாது என இபிஎஸ் அணியினர் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அதிமுகவின் உட்கட்சி மோதலால், ஆட்சிக்கு ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது. எனவே உட்கட்சி பூசலை நிதானமாகக் கையாள வேண்டும்” என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், அதிமுக டெல்லியிருந்து இயக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவிலுள்ளவர்கள் சுயமாக செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.