உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்பது விரைவில் தெரிய வரும் – நத்தம் விசுவநாதன்
உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது விரைவில் தெரிய வரும் என்று திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் கல்லறை மேடு பகுதியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.விற்கு மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்கள் விரும்பும் தலைவராக விளங்கியவர். அவரது இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்க மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும். இது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை.
திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. இது ஒன்றே ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது என்பதற்கு சான்றாகும்.
நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை விரைவில் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து பேசினால் தற்போது உள்ள அமைச்சர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உளறி வருகின்றனர். மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நீதிவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, குப்புசாமி, சுப்புரத்தினம், பாஸ்கரன் மற்றும் நெப்போலியன், திருமாறன், தர்மலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் அந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போலீசார் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.