சென்னை கிண்டியை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 42). பல் டாக்டரான இவர், ஒரு நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மனைவியை விவாகரத்து செய்தவர். இருப்பினும் முன்னாள் மனைவியுடன் அவர் நட்புணர்வுடன் பேசி வந்ததாக தெரிகிறது. செந்தில்ராஜின் முன்னாள் மனைவி சென்னை கிண்டியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சஞ்சீவ்ராஜ் (33) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதில் சஞ்சீவ்ராஜிக்கும், செந்தில்ராஜின் முன்னாள் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் செந்தில்ராஜிக்கு தெரியவந்தது. எனவே சஞ்சீவ்ராஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்தநிலையில் செந்தில்ராஜ், அவரது முன்னாள் மனைவி, சஞ்சீவ்ராஜ் உள்பட 20 பேர் ஒரு குழுவாக நேற்று முன்தினம் மாமல்லபுரம் சென்றனர். அங்கு ஒத்தவாடை தெருவில் கடற்கரை ஓரம் உள்ள தனியார் விடுதியில் 5 அறைகளை எடுத்து தங்கினர். நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு மது விருந்து நடந்தது.
அப்போது மதுபோதையில் இருந்த செந்தில்ராஜ், தனது அருகில் போதையில் இருந்த சஞ்சீவ்ராஜிடம் தனது முன்னாள் மனைவியிடம் நீ எப்படி கள்ளத்தொடர்பு வைக்கலாம் என கண்டித்தார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சீவ்ராஜின் வயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சஞ்சீவ்ராஜ் கீழே சரிந்தார். உடனே அருகில் இருந்த சக நண்பர்கள் உயிருக்கு போராடிய சஞ்சீவ்ராஜை மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதற்குள் விடுதியில் இருந்த பல் டாக்டர் செந்தில்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை பஸ்சில் சென்ற செந்தில்ராஜை கோவளம் அருகில் கைது செய்தனர். இதற்கிடையே மது விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசுக்கு பயந்து தப்பிச்சென்று விட்டனர்.
தனியார் விடுதிக்கு சென்ற மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் மது விருந்து நடந்த அறையை ஆய்வு செய்தனர். அங்கு தரையில் ரத்தக்கறை படிந்து காணப்பட்டது. மதுபாட்டில்கள், குளிர்பானங்கள் இருந்தன. பின்னர் கொலை சம்பவம் குறித்து மது விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சஞ்சீவ்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட சஞ்சீவ்ராஜிம் விவாகரத்து பெற்றவர்.