தினகரனிடம் விசாரணை நடத்த நாளை டெல்லி போலீசார் சென்னை வருகிறார்கள்.ஏசிபி சஞ்சய் ராவத் போலீஸ் அதிகாரி தலைமையில், விசாரணை நடைபெறுகிறது
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த இரு அணியினரும் அ.தி.மு.க. வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டா டினார்கள். ஆனால் இரு அணிக்கும் இரட்டை இலை சின்னத்தை வழங்காமல் அதை முடக்கி வைத்து தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இது தொடர்பான விசாரணை தற்போது தலைமை தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் மீண்டும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரட்டை இலைக்கு உரிமைக்கோரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதற்கான ஆவணங்களை ஏற்கனவே ஒப்படைத்துள்ளனர். அவர்கள் சுமார் 42 லட்சம் உறுப்பினர்களின் விவ ரங்களுடன் கூடிய ஆவணத்தை தாக்கல் செய்துள்ளனர்.சசிகலா அணியினரும் அதுபோன்று ஆவணங்களை தயார் செய்து வருகிறார்கள். அந்த ஆவணங்களை ஒப்படைப்பதற்கு அவர்கள் தலைமை தேர்தல் கமிஷனிடம் இரண்டு மாத கால அவகாசம் கோரி கடிதம் கொடுத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் இன்று தலைமை தேர்தல் கமிஷனில் நடை பெறுவதாக உள்ளது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி, விசாரணையை துவக்கவும் டெல்லி போலீசார் முடிவு செய்தள்ளனர்.இதற்காக நாளை டெல்லி போலீசார் சென்னை வருகிறார்கள்.ஏசிபி சஞ்சய் ராவத் போலீஸ் அதிகாரி தலைமையில், விசாரணை நடைபெறுகிறது