எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா தொடங்கினார்
மரியாதை நிமித்தமாகவே முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்ததாகவும், அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித் துள்ளார்.
எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா நேற்று தொடங்கினார். அதன் பிறகு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது உள்ள அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப் பட்டுள்ளது. இதற்குப் பின்னால் இருந்த துரோகக் கூட்டத்தின் பிடியில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் அரசியல் பயணத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ப தற்காகத்தான் எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என புதிய அமைப்புக்கு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்தப் பேரவை என்பது கட்சி கிடையாது. பிரிந் துள்ள அதிமுகவினரை இணைத்து இரட்டை இலையை மீட்பதற்கான அரசியல் பயணம். இது ஒரு அமைப்பாகத்தான் செயல் படும். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறது. அதற்கான பணிகளை மேற்கொள்வோம்.
மரியாதை நிமித்தமாகவே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். தொடர்ந்து அவர் என்னைப் பற்றி ஊடகங்களில் கூறி வந்தார். அதனால் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் இணைந்து செயல்படுவோமா என்பது குறித்து இதுவரை எந்தவித பேச்சுவார்த் தையும் நடைபெறவில்லை. அவர் வழியில் அவர் பணி செய்து வரு கிறார். என் வழியில் நான் பணி செய்வேன்.
ஜெயலலிதாவின் உறவினர் என்ற நிலையை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை. மக்கள் விரும்பினால்தான் அரசிய லுக்கு வருவேன் என தெரிவித் திருந்தேன். அதன்படி, மக்கள் விரும்பியதால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
இதை குடும்ப அரசியல் என கூறிவிட முடியாது. ஏனெனில், இதை நானே கையில் எடுத்துக் கொள்ளவில்லை. ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாக தெரி விக்க வேண்டும் என ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன். இதுவரை எந்த விளக்கத்தையும் எனக்கு யாரும் அளிக்கவில்லை. இதுகுறித்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்னும் நான் முடிவு செய்ய வில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த செயல்பாட்டையும் நிரூபிக்க வில்லை. பொறுத்திருந்து பார்த்து தான் அவரது செயல்பாட்டை விமர்சிக்க வேண்டும் என நினைக் கிறேன். தமிழகத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நிலவி வருகின்றன. பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள் ளனர். இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.