முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாரிசாக யாரையும் சுட்டிக்காட்டவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், “சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால்தான், தன் வாரிசாக யாரையும் அவர் சுட்டிக்காட்டவில்லை.
27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், அதிமுக ஆட்சியை எவராலும் தொட்டு பார்க்க முடியாது” என்றார்.
அவர் மேலும் பேசும்போது, “நாட்டிலேயே மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.
ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் விருப்பம்போல் உயர்கல்வி பயில புதிதாக அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தற்காக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பயனடைவதற்காக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு என பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது.
தொழில்துறையில் தமிழகத்தை 3-வது மாநிலமாக உயர்த்தி காட்டியவர் ஜெயலலிதா. திருவள்ளூர் மாவட்டத்தில் மின்விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் குறித்து பேசும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சியே காரணம். தொழிற்சாலைகள், ஏரிகள், கல்விக்கூடங்கள் நிறைந்த மாவட்டமாக திருவள்ளூர் திகழ்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஏரி உள்ள மாவட்டம் திருவள்ளூர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. பல்வேறு கல்விச்சாலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுகிறது” என்றார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இன்னும் 10 ஆண்டுகளில் விஞ்ஞானத்தில் சிறந்த மாநிலமாக மாறிவிடும் என்றும் அவர் பேசினார்.
சிலருக்கு எரிச்சல்; பலருக்கு புகைச்சல்: ஓபிஎஸ்
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலையை மீட்டெடுப்போம். அதிமுக அணிகள் இணைப்பு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=n9wDpCD1-ZM