விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பீமராவ், தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பனகல் மாளிகை அருகே கூடினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாசாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரராஜன், பீமாராவ் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக அங்கு 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு வறட்சி நிலவுகிறது. இதனால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
ஆனால் 15 பேர் மட்டுமே இறந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மரணம் அடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் மட்டுமே நிவாரண உதவி செய்யப்படுகிறது. அதை ரூ.10 லட்சம் ஆக வழங்க வேண்டும்” என்றார்.
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் தலைமையில் 250 பேர் தண்டையார்பேட்டை தபால்நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட செல்வ சிங் உள்பட 250 பேரை கைது செய்தனர்.
ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில துணைத் தலைவர் சிங்காரவேலன் தலைமையில் 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநின்றவூர் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.