ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழைக் கைப்பற்ற முயன்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு, தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயா தொலைக்காட்சியும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் தனியார் சொத்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அவற்றைக் கைப்பற்ற முயற்சி நடக்குமானால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
தனியார் சொத்துக்களை கைப்பற்றப் போவதாகக் கூறியிருப்பதன் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு 420 என மீண்டும் நிரூபித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட்டு வருவதாகவும் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ-க்கள் 21 பேர் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்தபோதே, அந்த பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகியிருக்க வேண்டும் என்றும், இவர் பதவியில் நீடிப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=WKchSvPnOXA