மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீது குறைசொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மதுரை கலெக்டர் அலு வலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபில் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அமைச்சர் நிலோபர் கபில் பேசுகையில், தொழிலாளர் நலத்துறை சார்பில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள், சலுகைகளை வழங்கியவர் அம்மா.
அவரது வழியில் செயல்பட்டுவரும் இந்த அரசு தொழிலாளர்களின் உற்றதோழனாக விளங்கி வருகிறது. ஆனால் இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அ.தி.மு.க.வை விமர்சிக்க எதிர்க் கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் நல அரசு அம்மா அறிவித்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. ஆனாலும் இன்றைக்கு சிலர் விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக 410 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான். இதை எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக விடுக்கிறேன்.
விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மற்ற கட்சிகள் செய்த திட்டங்கள் என்ன? இதுகுறித்து அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். செயல்படாத அரசு என்கிறார்கள், முடங்கிப்போன அரசு என்கிறார்கள்.
இந்த அரசு தொடர்ந்து 4 ஆண்டுகள் அல்ல… அடுத்து வரும் தேர்தலிலும் அமோக வெற்றிபெறும் என்றார்.
தொழிலாளர்களின் உற்ற தோழனாக, ஒளி விளக்காக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
ஆனாலும் அரசியல் லாபங்களுக்காக தேவையற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்துகின்றன. அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீது குறைசொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.