Thursday , November 21 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டது – டி.டி.வி.தினகரன்

மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டது – டி.டி.வி.தினகரன்

மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரணவ ஜோதி சக்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பணப்பட்டுவாடா செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களே?

பதில்:- யாரும் கைது செய்யப்படவில்லை. வீட்டில் இருந்த பணத்தை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.

கேள்வி:- தொடர்ந்து 4 கட்சிகள் உங்கள் அணி மீது புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- ஒரு பொய்யை பத்து பேர் சேர்ந்து சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா?

கேள்வி:- பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளாரே?

பதில்:- தோல்வி பயத்தில் என்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரம் செய்து வருகின்றன. எங்கள் வெற்றியை தடுக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள்.

கேள்வி:- வேட்பாளராகிய உங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?

பதில்:- தேர்தல் கமி‌ஷன் அதை பார்க்கட்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்போம்.

கேள்வி:- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்:- அவர்கள் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்களை சந்திக்காமல் பல அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் படிக்கட்டுகளில் காத்து இருக்கிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் ஏராளமான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே எங்கள் இயக்கம் பெரிய இயக்கம். நாங்கள் அழைத்தும் அழைக்காமலும் திருவிழா போல் தொண்டர்கள் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் தங்களது செலவுக்கு வைத்து இருக்கும் தொகையை பறிமுதல் செய்வது எப்படி முடியும். இதெல்லாம் பொய் பிரசாரம்.

கேள்வி:- உங்களுக்கு வெளியூரில் இருந்து பிரசாரம் செய்ய பலர் வந்திருக்கிறார்கள் என்றும் உள்ளூர் மக்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவர் அப்படி தான் சொல்வார். உள்ளூரில் உள்ள தொண்டர்களுடன் வெளியூரில் இருந்து வந்த தொண்டர்கள் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். இது எப்போதும் தேர்தல் நேரத்தில் நடக்கும் ஒன்று தான். ஓ.பன்னீர்செல்வமும் எங்களுடன் சேர்ந்து வேலை செய்த ஒரு தொண்டர் தான். அவர் இன்று வழி மாறி சென்று இருக்கிறார்.

கேள்வி:- ஆர்.கே.நகரில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …