கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.
கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காவிரிப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென நடுவர் மன்றமும், உச்ச நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவது மிகப்பெரிய மோசடி. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு நீரை வழங்க மறுத்து விட்டதுடன் மேகதாதுவில் அணை கட்டவும் நிதி ஒதுக்கியுள்ளது. இதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
இந்நிலையில் கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் பகுதி காவிரியாற்றில் பன்னூர் என்ற இடத்தில் 6 பிரம்மாண்ட கிணறுகளை அமைத்து பூமிக்கடியில் ரகசியமாக காவிரி நீரைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ள திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காத நிலை உருவாகும்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் 3-ம் கட்டமாக தொடர வேண்டும் என மத்திய அரசு விரும்ப வில்லை.3-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் வெளியுலக்கிற்கு தெரியக்கூடாது என மத்திய அரசு நினைப்பதே காரணம்.
நெடுமாறன் கூறியதைப் போல மாநில அரசே அந்த அகழ்வாராய்ச்சியை தொடர வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் வெட்டு அதிகமாக உள்ளது. தேவைப்படும் மின்சாரத்தை மத்திய அரசிடம் பெற வேண்டும்.
மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் அரசால் தைல மரங்கள் நடப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடிய தைல மரங்களை தவிர்த்து பலன் தரக் கூடிய மரங்களை வளர்க்க வேண்டும். இதில் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தைல மரங்களை வெட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
முழு அடைப்புப் போராட்டம் என்பது 2-ஜி அலைக் கற்றை வழக்கின் தீர்ப்பை திசை திருப்ப நடத்தப்பட வில்லை. விவசாயிகளுக்காகவே ஒன்றிணைந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் நிர்வாகிகள் கே.எஸ். அழகர்சாமி , திருநாவுக்கரசு , தர்மராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.